×

வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என அதிகார மமதையில் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்: திருமாவளவன் காட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தை தீவிர பேரிடராக அறிவித்து ரூ.21 ஆயிரம் கோடி நிவாரணமாக வழங்க வேண்டும். 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை மாநில தலைவர் கோபண்ணா, விசிக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருமாவளவன் பேசியதாவது: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் அதிகார மமதையில் பேசுகிறார்.

அவர் தன்னை ஒரு பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். மழை வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என்பது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்துகிறது. வல்லரசு நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு முறையை நடைமுறைப்படுத்தவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடுக்க இந்தியா கூட்டணி மூலம் நாடு முழுவதும் பரப்புரை செய்ய வேண்டும் என்றார்.

The post வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என அதிகார மமதையில் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்: திருமாவளவன் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Thirumavalavan Kattam ,Chennai ,Tamil Nadu ,2024 parliamentary general elections ,Liberation Tigers Party ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...